கீவ்: உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதமாகியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் சிங்கிளாக சிங்கம் போல் செயல்பட்டு ரஷ்யாவின் 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி ‛கீவ் நகரின் பேய்’ என புகழப்பட்டதோடு, உக்ரைன் வீரர்களுக்கு ஊக்கமாக இருந்த விமானி போரில் வீரமரணமமடைந்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே இருந்த மோதல் போக்கு பிப்ரவரி 24ம் தேதி போராக உருமாறியது. உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடங்கியது.
போராடும் உக்ரைன் :இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வெடிகுண்டு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்துள்ளன. அங்குள்ள வீரர்கள், அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றன. இவர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இருப்பினும் மனம் தளராத உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.
40 விமானங்களை வீழ்த்தியவர் பலி : இந்நிலையில் தான் போரின்போது 40 ரஷ்ய விமானங்களை சிங்கம்போல் தனி ஆளாக சுட்டு வீழ்த்தி புகழ்பெற்ற விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா (வயது 30) இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தான் போர் துவங்கிது முதல் ரஷ்யா படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இவர் மிக் 29 ரக விமானத்தில் பறந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.
‛கீவ் நகரின் பேய்’ :போரின் முதல் நாளில் மட்டும் 10 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தி உலகளவில் புகழ் பெற்றார். அவரது பெயர் விபரங்களை உக்ரைன் அரசு வெளியிடவில்லை. மாறாக கீவ் (உக்ரைன் தலைநகர்) நகரின் பேய்(Ghost Of Kyiv) என அழைக்க தொடங்கினர். தற்போது வரை அவர் 40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது இத்தகைய செயல்பாடு உக்ரைன் வீரர்களை உற்சாகப்படுத்தியது.
உயர் பதக்கம், பாராட்டு போர் களத்தில் சிங்கமாய் செயல்பட்டு ரஷ்ய படைகளை துவம்சம் செய்த இவரது பணியை பாராட்டி உக்ரைன் சார்பில் சிறப்பு பதக்கமான ‛ஆர்டர் ஆப் தி கோல்டன் ஸ்டார்’ வழங்கப்பட உள்ளது. மேலும் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் மற்றும்
கண்ணாடிகள் இப்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏழை குடும்பத்தின் வாரிசு : மேஜர் ஸ்டீபன் தாராபால்கா மேற்கு உக்ரைனில் உள்ள கொரோலிவ்காவ் கிராமத்தில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர்களின் பெற்றோர் தொழிலாளியாக இருந்தனர். சிறுவயது முதலே விமானம் இயக்குவதை ஆர்வமாக கொண்டு படித்து வந்தார். உக்ரைன் விமானப்படையில் விமானியாக பணியில் சேர்ந்தது முதல் அவரது கனவு நனவானது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.