இயக்குனர் தமிழ் இயக்கி கதாநாயாகனாக விக்ரம் பிரபு நடித்து வெளியான திரைப்படம் டாணாக்காரன். முன்னணி நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
காவல்துறையில் பணியாற்றிவிட்டு சினிமா துறைக்கு வந்த இயக்கிநர் தமிழ் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லன் போலீசாக நடித்து மிரட்டி இருப்பார்.
இவர் காவலர் பயிற்சிப் பள்ளிகளில் அரங்கேறும் கொடுமைகள் குறித்தும், அதில் இருக்கும் ஊழல்கள் பற்றியும் காவல்துறையில் ஏன் இன்னும் எதுவும் மாறவில்லை என்பது பற்றியும் இப்படத்தில் விரிவாக அலசி இருப்பார். விறுவிறுப்பான திரைக்கதையை கருவாக கொண்டு அமைக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தபடம் தமிழ்நாட்டில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் திரையிடப்பட்டு இருக்கிறது. இதில் இயக்குநர் தமிழையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.
அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி திரையிடலுக்கு என்னை அழைத்து இருந்தார்கள். படம் பார்த்து விட்டு காவலர் பயிற்சியில் உள்ள காவலர்களுடன் உரையாடும் வாய்ப்பை நிர்வாகம் எனக்கு அளித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை திரையிட ஆணை பிறப்பித்த காவலர் பயிற்சி துறை தலைவர் திரு அருண் I.P.S அவர்களுக்கும் அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் திரு. மணிவண்ணன் IPS அவர்களுக்கும் நன்றி.
இறுதியாக அங்கிருந்து கிளம்பும் போது அங்கு இருந்த முதன்மை அதிகாரியிடம் டாணாக்காரன் திரைப்படத்தை ஏன் திரையிடல் செய்கிறீர்கள்? என்று நான் கேட்ட போது ‘எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மக்களுக்காக உழைக்க நினைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்க்குள் வர வேண்டும் என நீங்க சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் காவல் துறை தலைவர் சொன்னார். அதான் இந்த திரையிடல்’ என அவர் சொன்ன போது கொஞ்சம் அதிர்ச்சியாகி தான் நின்றேன்.