சென்னை: அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதன் தாக்கம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கோடை வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.
அதிக வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. அதன் காரணமாக தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.
திருத்தணியில் 104 :டிகிரி வெப்பநிலை திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். குளிர்பான கடைளில் பழ ஜூஸ் , கரும்பு ஜூஸ், பதநீர் நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு உடல் சூட்டை தணித்தனர்.
பல ஊர்களில் சதமடித்த வெயில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. வேலூர் 102 டிகிரி, திருச்சி, மதுரை 100 டிகிரி, ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னையில் 97 டிகிரி வெயில் நிலவியது. அக்னி நட்சத்திர காலம் அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாக வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வதைக்கிறது.
அக்னி ஆட்டம் ஆரம்பம் :அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல ஊர்களில் காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெப்பத்துடன் அனல் காற்றும் வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
தவிக்கும் மக்கள் :வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.. வாகன ஓட்டிகள் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனத்தை ஓட்டிச்சென்றனர். பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். தலைநகர் சென்னையிலும் மீனம்பாக்கத்தில் 96.98 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 95.18 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஆங்காங்கே மழை : அதிக வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் காரணமாக தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை நேற்று பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதே நிலை 28ம் தேதி வரை நீடிக்கும்.