திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சரகத்திற்குட்பட்ட 4 மலைகிராம மக்கள் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப்போடும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
திருமூர்த்தி மலை, குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய 4 மலைகிராம மக்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இதற்கு முன் வாக்களித்திருந்தாலும் கூட, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல்முறையாகும்.தளி பேரூராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 17-வது வார்டுகளில் இந்த 4 மலைகிராமங்களும் வருவது குறிப்பிடத்தக்கது.
உடுமலை சரகம் : உடுமலை சரகத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் திருமூர்த்திமலை, மேல்குருமலை, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை என்ற 4 மலை கிராமங்கள் உள்ளன. இதில் திருமூர்த்திமலை ஷூட்டிங் ஸ்பாட் என்பதால் அதைப்பற்றி ஓரளவு அனைவருக்கும் தெரியும். மற்றபடி மேல்குருமலை, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய 3 மலைகிராமங்களை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
மலைகிராமங்கள் : உள்ளாட்சி அமைப்புகளில் இந்த கிராமங்களை எதனுடன் சேர்ப்பது என்ற குழப்பம் காரணமாக பல ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டதில்லை. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட வார்டு மறுவரையறையின் போது தளி பேரூராட்சி வார்டுகள் 15-ல் இருந்து 17 ஆக உயர்த்தப்பட்டன. அதன்படி 16-வது வார்டில் குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய 3 மலைகிராமங்கள் இணைக்கப்பட்டன.
திருமூர்த்திமலை :மொத்தம் 385 வாக்காளர்கள் கொண்ட இந்த மூன்று கிராமங்களில் மலை புலையர்களும், முதுவர் பழங்குடிகளும் முழுமையாக வசிக்கின்றனர். இந்த வார்டில் அதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறது. இதேபோல் தளி பேரூராட்சி 17-வது வார்டில் திருமூர்த்திமலை இணைக்கப்பட்டுள்ளது. அங்கும் மலை புலையர் பிரிவை சேர்ந்தவர்களே வசிக்கின்றனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 234 ஆகும். 17-வது வார்டான திருமூர்த்திமலையில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
திருவிழா போல் : இதனிடையே தங்களது நீண்டகால கனவு நிறைவேறியது பற்றி கூறும் குருமலையை சேர்ந்த ஒருவர், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை தங்கள் கிராம மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதாகவும் இந்த தேர்தல் மூலம் தங்களு பகுதியின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். செல்போன் டவர் அமைத்து தருவேன் என்றும், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் மூலம் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மலைகிராம மக்களிடம் வார்க்குறுதிகள் அளித்திருக்கின்றனர்
மொத்தம் 15 கிராமங்கள் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் இருக்கும் 15 மலை கிராமங்களில் மேற்கண்ட 4 மலை கிராமங்கள் மட்டும் தளி டவுன் பஞ்சாயத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 மலை கிராமங்கள் ஊரகப் பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் அடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக தங்கள் வாக்கை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உடுமலைபேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்குள் இந்தப் பகுதிகள் வருவது குறிப்பிடத்தக்கது.