ஜெர்மனிக்கு இன்று அதிகாலை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை தேசபக்திப் பாடலைப் பாடி இந்திய சிறுவன் வரவேற்றார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்றிரவு தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனியில் உள்ள பெர்லின் – பிரேண்டர்பர்க் விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார் மோடி. அங்கிருந்து, அட்லான் கெம்பென்ஸ்கி ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இந்திய சமூக மக்களுடன் உரையாடினார். அப்போது, வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஒரு சிறுவன் தேச பக்திப் பாடலைப் பாடி பிரதமரை வரவேற்றார். அப்போது, பிரதமர் கைதட்டி அவரைப் பாராட்டினார். சிறுவன் பாடி முடிக்கும்போது வாவ் என்று கூறினார். பலர் அவரை வாழ்த்தி கைகளை அசைத்துக் காட்டினர். சிலர் மோடியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பிரதமர் செல்கிறார். முதலில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில், பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸை சந்திக்கிறார். பின்னர். இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.