உங்கள் காரின் டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்பதை உணர்த்தும் 4 முக்கியமான அறிகுறிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உங்கள் காரின் டயர்களில் சரியான அளவில் காற்றை நிரப்புவது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் காரின் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும். அத்துடன் உங்கள் கார் சிறப்பான மைலேஜை வழங்க வேண்டுமென்றாலும் கூட, டயர்களில் காற்றின் அளவு சரியான அளவில் இருப்பது அவசியம். இது டயர்களின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கும் உதவி செய்யும்.
டயரில் சரியான அளவில் காற்றை நிரப்பியிருந்தால், ‘த்ரெட் மூவ்மெண்ட்’ குறையும். இதன் காரணமாக டயர் மிக நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். அத்துடன் டயரில் காற்றின் அளவு சரியாக இருந்தால், ‘ரோலிங் ரெஸிஸ்டன்ஸ்’ குறையும். இது உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்க உதவி செய்கிறது. டயரில் காற்றின் அளவு சரியாக இருந்தால் கிடைக்க கூடிய நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
மறுபக்கம் காற்றின் அளவு குறைவாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருக்கிறது என்பதை ஒரு சில எச்சரிக்கை அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். டயர்களில் சரியான அளவில் காற்றை நிரப்பி பல்வேறு நன்மைகளை நீங்கள் பெறுவதற்கு இந்த தகவல்கள் உதவும்.
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
இது கார்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். தற்போது விற்பனைக்கு வரும் ஓரளவிற்கு விலை குறைவான கார்களில் கூட டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. டயரில் காற்றின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உங்களை எச்சரிக்கை செய்யும்.
காரின் ஒரு டயரில் காற்று குறைவாக இருந்தால் கூட, டேஷ்போர்டில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்திற்கான எச்சரிக்கை விளக்கு எரியும். டயர்களில் இந்த அளவில் காற்று இருக்க வேண்டும் என உங்களுக்கு ஏற்கனவே பரிந்துரை வழங்கப்பட்டிருக்கும். பரிந்துரை செய்யப்பட்ட அந்த அளவை காட்டிலும் குறைவாக இருந்தால், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்திற்கான விளக்கு எரியும்.
டயர்களில் காற்று குறைவாக இருந்தால் நாம் கண்களாலேயே பார்க்க முடியும்தான். ஆனால் கண்களால் பார்க்க கூடிய அளவிற்கு நிலைமை மோசமடைவதற்கு முன்பாகவே, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உங்களை எச்சரிக்கை செய்து விடும். அதாவது பரிந்துரை செய்யப்பட்ட அளவில் இருந்து காற்றின் அளவு 10 சதவீதம் குறைந்தாலே கூட, இந்த எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கி விடும்.
ஒரு சில கார்களில் இடம்பெற்றிருக்கும் அதிநவீன டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்கள், எந்த டயரில் காற்றின் அளவு குறைவாக உள்ளது என்பதையும் டிரைவருக்கு தெரியப்படுத்தும். அத்துடன் ஒவ்வொரு டயரிலும் எவ்வளவு ‘ஏர் பிரஷர்’ உள்ளது? என்பதும் டிரைவருக்கு தெரியப்படுத்தப்படும். இந்த விளக்கு எரிகிறது என்றால், டயர்களில் நீங்கள் சரியான அளவில் காற்றை நிரப்பி விட வேண்டும்.
ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். டயர்களில் சரியான அளவில் காற்றை நிரப்பிய பிறகும், எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருந்தால், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமில் கோளாறு உள்பட வேறு சில பிரச்னைகள் இருக்கலாம். டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கும்போதும் கூட, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்திற்கான எச்சரிக்கை விளக்கு எரியும் பிரச்னை பலருக்கும் ஏற்படுகிறது.
உங்கள் கார் இவ்வளவு மைலேஜ் தரும் என காரை வாங்கும்போது தெரிவிக்கிறார்கள் அல்லவா? அந்த மைலேஜ் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டுதான் தீர்மானிக்கப்படும். இதில், டயர்களில் காற்றின் அளவை சரியாக நிரப்பியிருப்பதும் ஒன்று. டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருந்தால், உங்கள் கார் அதிக எரிபொருளை நுகரும். எனவே மைலேஜ் குறையும்.
நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு செல்ல நேரிட்டால், உங்கள் காரின் டயர் பிரஷரை பரிசோதித்து விடுங்கள். இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் உங்கள் காரின் மைலேஜிற்கும், டயருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்கள் கார் அதிக மைலேஜ் வழங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், டயர்களில் காற்றின் அளவை சரியாக பராமரியுங்கள்.
ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ்
உங்கள் கார் குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நீங்கள் பிரேக் பிடித்தால் முழுமையாக நிற்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கார் முழுமையாக நிற்பதற்கு அதிக நேரம் ஆகிறது என்றால், டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருக்கலாம். இந்த அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக டயர்களில் காற்றின் அளவை பரிசோதனை செய்யுங்கள்.
படபடவென அடிக்கும் சத்தம்
நீங்கள் காரை ஓட்டி கொண்டிருக்கும்போது படபடவென அடிப்பது போன்ற சத்தம் கேட்டால், அது டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருப்பதை காட்டும் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி உங்களுக்கு தெரிந்தால், காரை உடனடியாக பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, டயர்களில் காற்றின் அளவை பரிசோதனை செய்யுங்கள்.