இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பால், அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை மிக மோசமான உயர்வினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் தான் இலங்கையில் பணவீக்கம் உச்சத்தினை எட்டியுள்ளது. மொத்தத்தில் மிக மோசமான பணவீக்கம், அதல பாதாளத்தில் உள்ள கரன்சி மதிப்பு என பலவும் அத்தியாவசிய பொருட்கள் விலையை மேலும் தூண்டியுள்ளது.
மொத்தத்தில் இலங்கையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
விலை இருமடங்கு அதிகரிப்பு
மேலும் பெரும்பாலான கடைகள் காலியாகவே உள்ளன. கையில் பணம் இருந்தாலும் மக்கள் வெறும் கையோடு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா டுடே அறிக்கையின் படி, சமீப வாரங்களாக அங்கு காய்கறிகளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. முக்கிய உணவு பொருட்களாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட முக்கிய பொருட்கள், கிலோவுக்கு 220 ரூபாய் மற்றும் 190 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
இலங்கை மக்கள் அடிப்படை தேவைகளுக்காக கூட மணிக்கணிக்கில் வரிசையில் நிற்கும் மோசமான நிலையை காண முடிகிறது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர்.
உணவு & சில்லறை பணவீக்கம்
கிலோ சர்க்கரை 240 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் 850 ரூபாய்க்கும், ஒரு முட்டை விலை 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பால்பவுடரின் விலை 1900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இலங்கையின் சில்லறை பணவீக்கம் 17.5 சதவீதமாக உச்சம் தொட்டது. இதே உணவு பணவீக்கம் 25 சதவீதமாக அதிகரித்தது.
மருந்து, பால் பவுடர்களுக்கு தட்டுப்பாடு
இது மட்டும் அல்ல மக்கள் அதிகமாக பயன்படுத்தும் உணவு தானியங்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையானது பெரியளவில் உச்சம் தொட்டுள்ளது. மருந்துகளுக்கும், பால்பவுடர்களும் விலை அதிகரித்திருந்தாலும், தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது.
போராட்டம்
நாட்டில் நிலவி வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தினை கையில் எடுத்துள்ளனர். அரசுக்கு எதிராக போர் கொடியினை தூக்கியுள்ளனர். ராஜபக்சே அரசு உணவுக்கு தட்டுப்பாடு, நீடித்த மின் வெட்டு, விலை வாசி என வாட்டி வதைப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் இந்த போராட்டங்களை குறைக்க இலங்கை அரசு 36 மணி நேர அவசரகால பிரகடன நிலையை அமல்படுத்தியுள்ளது.