சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக காரணமாக கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 44 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜடேஜா தலைமையிலான சென்னை இதுவரை 8 போட்டிகள் விளையாடி 6ல் தோல்வியடைந்து கிட்டதட்ட தொடரை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. அதேசமயம் வழக்கமான தனது பார்மில் இருந்து ஜடேஜா விளையாட தவறியதால் அவர் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டு தான் விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக ஜடேஜா தெரிவித்திருக்கிறார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக தோனியின் நடவடிக்கை தான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்டிகளின் போது ஜடேஜாவால் கேப்டன்சியில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை என்றும், இக்கட்டான சூழ்நிலையில் தோனியே அதனை செய்வதால் அணி வீரர்கள் யார் சொல்வதை செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதனையெல்லாம் தவிர்க்க தான் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளதாக தெரிகிறது. அதேசமயம் அடுத்தாண்டு தோனி ஓய்வுபெற்ற பின்னர் முழு நேர கேப்டனாக ஜடேஜா செயல்படும் வகையில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.