வெண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கும் மூளை வளர்ச்சிக்கும் மிக நல்லது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். பொதுவாக வெண்டைக்காய் நல்ல அடர் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்திலும் வெண்டைக்காய் இருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட 23 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி இது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வெஜிடபிள் ரிசர்ச்சில் இந்த ஆய்வு 1995 ஆம் ஆண்டிலிருந்து நடந்து 2018 ஆண்டு வெற்றி கண்டது.
சிவப்பு நிற வெண்டைக்காயில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன. இதில்
- நார்ச்சத்துக்கள்,
- ஆக்சிடணட்டுகள்,
- கால்சியம்,
- மக்னீசியம்,
- இரும்புச்சத்து
இவற்றை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
உலக அளவில் அதிகமானோர் இறப்புக்கு இதய நோய்கள் முதன்மையான காரணமாக இருக்கின்றன என உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பக்க வாதம், மாடைப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் என பல பிரச்சினைகள் இதய நோயுடன் தொடர்பு பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த சிவப்பு நிற வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாக உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இதய வால்வுகளில் கொழுப்புப் படிதல், அடைப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்கின்றன.
நாம் வழக்கமாக சாப்பிடும் வெண்டைக்காய்க்கு கூட ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
அதேபோல தான் இந்த சிவப்பு நிற வெண்டைக்காயும். சிவப்பு நிற வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பு முறைப்படுத்தப்படும்.
ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். இந்த சிவப்பு வெண்டைக்காயில் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு.
கர்ப்ப காலம் ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த உடலிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும். வழக்கத்தை விடவும் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாகத் தேவைப்படுவதே இரும்புச்சத்தும் போலிக் அமிலமும் தான். இந்த -சிவப்பு நிற வெண்டைக்காயை கர்ப்ப காலத்தில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.