வாஷிங்டன்: மனிதர்களை அதிகளவில் கொசு கடிப்பதற்கான காரணத்தை அமெரிக்காவை சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
கொசுக்கடி பற்றி ஆய்வு : மனிதர்களின் நிம்மதியை கெடுக்கும் கொசுக்களை நெருங்கவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கொசுக்கள் ஏன் அதிகளவில் மனிதர்களை கடிக்கின்றன என்ற ஆய்வும் நடந்து வருகிறது. உலகில் உள்ள பல கோடிக்கணக்கான உயிர்களில் மனிதர்களைதான் கொசுக்கள் விரும்பி கடிக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் இதற்கான காரணத்தைதான் தற்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கிறது. அதை நேச்சர் (Nature) என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கொசுக்கள் வாசனையை வைத்தே விலங்குகளை அதிகம் நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருக்கும் சிட்ரஸ் அமில வாசனை (எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் இருப்பது) கொசுக்களை ஈர்க்கின்றனவாம்.
டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு காரணமான ஏடிஸ் இன கொசுக்கள் விலங்குகளை விட மனிதர்களின் வாசனையை விரும்புவதை அறிந்த விஞ்ஞானிகள், கொசுக்களின் மூளை எந்தெந்த வாசனைகளை எந்த அளவுக்கு விரும்புகின்றன என்பதை அறிய முயற்சித்தனர். இதற்காக கொசுக்களை மரபணு ரீதியாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் விதவிதமான வாசனைகளில் அவற்றின் மூளையின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்டறிந்துள்ளனர்.
இதற்காக 16 மனிதர்கள், 2 எலிகள், 3 பன்றிகள், 2 காடைகள், ஒரு ஆடு, 4 நாய்களின் ரோமங்கள், கம்பளி மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்த விஞ்ஞானிகள் அவற்றை கொசுக்களை வைத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது மனிதர்களின் ரோமங்கள் கொசுக்களை அதிகம் ஈர்த்துள்ளன. இதற்காக கொசுக்களின் மூளையில் 2 ரசாயனங்கள் உருவாகின்றன. அவை டெகனால், அண்டெகனால் என அழைக்கப்படுகின்றன. ஆரஞ்சு, சிட்ரஸ் வாசனை கொண்ட அவை மனித வாசனையால் செறிவூட்டப்பட்டுள்ளன. இதுதான் மனிதர்களை கொசுக்கள் ஈர்ப்பதற்கான காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.