பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்.
“பல பெண்களும் சந்திக்கிற பரவலான பிரச்னை இது. நடக்கும்போது இரண்டு தொடைகளும் ஒன்றோடு ஒன்று உரசி, அந்த இடத்திலுள்ள வியர்வை, ஈரம் எல்லாம் சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள சருமம் எரிந்ததுபோலாகிவிடும். சிவந்துவிடும். தொட்டாலே எரியும். ஆற ஆற அந்தப் பகுதி கருத்துவிடும். உடல் பருமன் அதிகமுள்ளோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படும். நிறைய உடற்பயிற்சிகள் செய்வோர், தொடைப் பகுதியில் அதிக வியர்வை இருப்பவர்கள் போன்றோருக்கும் வரும்.
இரண்டு தொடைகளும் உரசாமலிருக்கும்படி இடையில் ஒரு தடையாக உடையை அணிவது ஒரு தீர்வு. அந்தப் பகுதியில் காற்றோட்டமில்லாததால் வியர்வை அதிகம் சுரப்பதைத் தடுக்கும்படி காட்டன் உடைகளை அணிவது அவசியம்.
நைலான் மாதிரியான உடைகளைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்வோர், தொடைகள் உரசுவதையும் வியர்ப்பதையும் தவிர்க்க ஷார்ட்ஸ் அல்லது டைட்ஸ் அணிந்து கொள்ளலாம். உள்ளாடை சரியாக இல்லாவிட்டாலும் இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் `பாக்ஸர் ஷாட்ஸ்’ போன்ற உள்ளாடையை மாற்றிப் பார்க்கலாம்.
தொடைப்பகுதியில் மாய்ஸ்ச்சரைசர் தடவலாம் அல்லது பேபி பவுடர் பூசலாம். இன்ஃபெக்ஷன் இருப்பதாகத் தெரிந்தால் ஆன்டி ஃபங்கல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம். வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவுவதும் பலனளிக்கும். தொடைகள் உரசிப் புண்ணாகிவிட்டால் அந்தப் பகுதியை ஈரமில்லாமல் உலரவைத்து ஆறவிட வேண்டும். சில பெண்களுக்கு சிறுநீர்க்கசிவு இருப்பதாலும் இந்தப் பிரச்னை வரலாம்.
பேன்ட்டி லைனர் உபயோகித்து ஈரப்பதத்தைக் குறைப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதையெல்லாம் தாண்டி, நிரந்தர தீர்வு வேண்டும் என்போருக்கு `ஸ்கூல் ஸ்கல்ப்ட்டிங்’ என்ற சிகிச்சை பலனளிக்கும். அதாவது இந்த முறையில் தொடைப்பகுதியிலுள்ள கொழுப்பு குறைக்கப்படும். தேவைப்பட்டால் லைப்போசக்ஷன் சிகிச்சையும் தீர்வளிக்கும். எடையைக் குறைப்பதும் இந்தப் பிரச்னைக்கான ஒரு தீர்வுதான். எனவே நீங்கள் அதற்கான முயற்சிகளையும் நிச்சயம் பின்பற்றலாம்.”