மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் பொலார்ட் அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
34 வயதான பொலார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். தற்போது டி20 உலககோப்பைக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
பொலார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 101 டி20 போட்டியும் விளையாடியுள்ளார்.
பொலார்ட் உருக்கம்
ஆனால் பொலார்ட் இதுவரை ஒரு முறை கூட சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இது தொடர்பாக இண்ஸ்டாவில் ரசிகர்களிடம் பேசியுள்ள பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியது பெருமை அளிக்கும் விசயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
4000 ரன்கள்
10 வயதில் இருந்ததே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறி இருப்பதாகவும் அவர் கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியும் வாழ்நாளில் மறக்க முடியாதவை என்று அவர் கூறினார். 101 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள பொலார்ட் 1569 ரன்களை அடித்துள்ளார்.
இதில் 6 அரைசதங்கள் அடங்கும். இதே போன்று 123 போட்டியில் விளையாடியுள்ள பொலார்ட், 2706 ரன்கள் அடித்துள்ளார் இதில் 13 அரைசதங்கள், 3 சதங்கள் அடங்கும். அதிக டி20 போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பொலார்ட் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார்.
ஓய்வுக்கு காரணம்
டி20 உலககோப்பையையும் பொலார்ட் வீரராக வென்றுள்ளார். இந்த நிலையில், பொலார்டின் ஃபார்ம் கடந்த சில போட்டியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட தொடரில் அந்த அணி படுதோல்வியை தழுவியது. அப்போது இளம் வீரர்களுடன் பொலார்ட் மோதலில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான், தற்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொலார்ட் முழுக்கு போட்டார். எனினும் ஐபிஎல் போன்ற தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.